பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கவலை


பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 8 Jun 2017 4:00 AM IST (Updated: 8 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பட்டீஸ்வரம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுமார் 500 ஏக்கர்களில் கடந்த 4 மாதங்களாக கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். சம்பா, தாளடி நெல் அறு வடைக்குப்பின் விவசாயிகள் கோடை சாகுபடியாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நெற்பயிர் கதிர்கள் வந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் கும்பகோணம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூர், கொற்கை, நாதன் கோவில், பழையாறை ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

விவசாயிகள் கவலை

கடந்த குறுவை, சம்பா சாகுபடியில் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் எற்பட்டது. இந்த நிலையில் கோடை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரும் பலத்த மழையால் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story