தமிழகத்தில் காங்கிரசுக்கு சொந்தமான சொத்துகள் விரைவில் மீட்கப்படும்


தமிழகத்தில் காங்கிரசுக்கு சொந்தமான சொத்துகள் விரைவில் மீட்கப்படும்
x
தினத்தந்தி 7 Jun 2017 11:00 PM GMT (Updated: 7 Jun 2017 9:16 PM GMT)

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகள் விரைவில் மீட்கப்படும் என சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் திருச்சி வேலுச்சாமி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்கள் எங்கெங்கு உள்ளன. அவற்றை மீட்டு ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் தஞ்சை மேலவீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கட்சி சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் திருச்சி வேலுச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி நேர்மையாக செயல்பட்டதால் கடந்த காலங்களில் பலர் தங்களது இடங்களை கட்சிக்கு தானமாக வழங்கியுள்ளனர். இந்த இடங்களுக்கான முறையான ஆவணங்கள் மாநில தலைமையிடம் இல்லை. இதனால் மாநில தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பு ஏற்றவுடன் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களை எல்லாம் ஒருங்கிணைத்து மீட்க வேண்டும் என்பதற்காக 19 பேர் உறுப்பினர்களாக கொண்ட சொத்து பாதுகாப்புக்குழுவை உருவாக்கியுள்ளார். இதை அறிந்த ராகுல்காந்தி இது நல்ல திட்டம் என்று பாராட்டியதோடு எல்லா மாநிலங்களிலும் இதேபோல் குழு அமைத்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி எல்லா மாநிலங்களிலும் சொத்து பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டு வருகிறது.

2 மாதத்தில் நிறைவடையும்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட சில ஊர்களில் காங்கிரஸ் கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களிடம் கட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் நேரில் பார்வையிட்டுள்ளோம். காங்கிரஸ் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களிடம் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்கள் இருந்தால் அவற்றை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எப்படி மீட்க முடியுமோ அப்படி மீட்போம். தஞ்சை, கும்பகோணம், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் கட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவற்றை நேரில் பார்வையிட்டு அந்த இடத்திற்குரிய பத்திரங்களை பெறும் நடவடிக்கையை மேற்கொள்வோம். தமிழகம் முழுவதும் இந்த பணி இன்னும் 2 மாதங்களில் நிறைவடையும். எல்லா மாவட்டங்களிலும் சொத்துகளை மீட்ட பின்னர் அவைகள் அனைத்தும் மாநில தலைவரின் கண்காணிப்பில் முறைப்படுத்தப்படும். தமிழகத்தில் செயல்படாத ஆட்சி இருந்து என்ன பயன்? இந்த ஆட்சியால் எவ்வித பயனும் இல்லை. இதனால் ஆட்சியை கலைத்துவிட்டு சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும். அப்போது வாக்காளர்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் விஷ்ணுபிரசாத், ராமசுப்புராம், டி.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இதில் மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், நிர்வாகிகள் சதாசிவம், ரேவதி சக்கிலோ, ராம்பிரசாத், மோகன்ராஜ், ரவிச்சந்திரன், ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story