மாயமானவர்கள் பற்றிய புகார்கள் மீது உடனடி நடவடிக்கை இன்ஸ்பெக்டர்களுக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
சென்னையில் மாயமானவர்கள் பற்றிய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் மாயமானவர்கள் பற்றி வரும் புகார்களை பெரிதும் கண்டுகொள்வதில்லை. ஒரு சில புகார்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். இதுபோன்ற புகார்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடப்பதாக சொல்லப்படுகிறது.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அண்மையில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து சென்னையில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கேட்டார். உடனடியாக மாயமானவர்கள் தொடர்பான புகார் விவரங்களை எடுத்தனர். புகார் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, விசாரித்து தகவல் சேகரித்தனர்.
காதல் திருமணம்
இவ்வாறு தகவல் சேகரித்தபோது, பல விவரங்கள் கிடைத்தன. மாயமான இளம்பெண்கள் பலர், காதலர்களை மணந்து குடும்பம், குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு சிலர் விபத்தில் இறந்துபோனது தெரிய வந்தது. மாயமான முதியவர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் பலரின் நிலைமை பற்றி பெரும்பாலும் தகவல்கள் இல்லை.
குறிப்பிட்ட 2 போலீஸ் நிலையங்களில், மாயமானவர்கள் பற்றி 60 புகார் மனுக்கள் நிலுவையில் இருந்தன. விசாரித்ததில், 24 மனுக்களுக்கு மட்டும் புகார் கொடுத்தவர்களிடம் இருந்து தீர்வுக்கான தகவல் கிடைத்தது. மீதி 36 மனுக்களில் காணாமல் போனவர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் பதில் அளித்தனர்.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
இதுபோல் காணாமல் போனவர்கள் பற்றி கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடுமையாக கண்டித்தார்.
இனிமேல் இதுபோன்ற புகார் மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனே வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story