பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் மந்திரிசபை கூட்டத்தை சிவசேனா புறக்கணித்தது மராட்டிய அரசியலில் பரபரப்பு


பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் மந்திரிசபை கூட்டத்தை சிவசேனா புறக்கணித்தது மராட்டிய அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Jun 2017 3:22 AM IST (Updated: 8 Jun 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் மந்திரிசபை கூட்டத்தை சிவசேனா புறக்கணித்தது.

மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் மந்திரிசபை கூட்டத்தை சிவசேனா புறக்கணித்தது.

மந்திரிசபை கூட்டம்


பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அக்டோபர் 31-ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி மீதான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மும்பையில் தலைமை செயலகத்தில் நேற்று மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில், சிவசேனா மந்திரிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

இதுபற்றி தலைமை செயலகத்துக்கு வெளியே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் பேசுகையில், “இதனை புறக்கணிப்பாக கருத வேண்டாம் என்று சிவசேனா மந்திரிகள் என்னிடம் தெளிவுபடுத்தினார்கள். பயிர்க்கடன் விவகாரம் குறித்து பேசும்போது எங்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்கள் மந்திரிசபையில் அங்கம் வகிப்பதால், நிச்சயமாக அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கெடுப்பர் என்று அவர்களிடம் உறுதியளித்தேன்” என்றார்.

கோபத்துடன்...

இதேபோல், பாரதீய ஜனதாவை சேர்ந்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், “சிவசேனா மந்திரிகள் மந்திரிசபை கூட்டத்துக்கு வந்து, இடையில் கோபத்துடன் திரும்பினார்கள் என்று கூறுவது சரி அல்ல. அவர்கள் கூட்டத்துக்கு வந்து, உத்தவ் தாக்கரே மும்பையில் இல்லை, ஆகையால் அவருடன் கலந்து பேசும் முன்பு, எங்களால் மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறினார்கள்” என்றார்.

இதனிடையே, சிவசேனா மந்திரிகள் மந்திரிசபை கூட்டத்தை புறக்கணித்ததை அக்கட்சியை சேர்ந்த போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே உறுதிப்படுத்தினார். முன்னதாக, அக்கட்சி மந்திரி சுபாஷ் தேசாயின் இல்லத்தில் வைத்து சிவசேனா மந்திரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட்னாவிஸ் அரசியலாக்கி விட்டார்

இந்த நிலையில், சிவசேனா மந்திரிகள் மந்திரிசபை கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணம் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால், மந்திரிசபை கூட்டத்தில் பயிர்க்கடன் பற்றி விவாதிக்கப்படும் என்று நாங்கள் நம்பினோம். ஏனென்றால், பயிர்க்கடன் மீதான முடிவு மந்திரிசபை கூட்டத்தில் தான் எடுக்கப்படும். ஆனால், இந்த பிரச்சினையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசியல் ஆக்கி விட்டார்.

பதில் கிடைக்காத கேள்விகள்

பா.ஜனதாவால் எங்களுடன் பேச்சு நடத்த முடியவில்லை என்றாலும், எங்களது நிலைப்பாட்டையாவது புரிந்து கொள்ளட்டும். எங்களுடனும், சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா தலைவர் ராஜூ ஷெட்டியுடனும் நீங்கள் பேச்சு நடத்தவில்லை என்றால், வேறு யாருடன் பேசுவீர்கள்?. விவசாயிகளிடம் மட்டும் தான் பேசுவேன் என்று முதல்-மந்திரி சொல்கிறார். ஆனால், உண்மையான விவசாயிகள் யார் என்பதை அவரிடம் யார் சொல்லுவார்கள்?

விவசாயிகளுடன் பேச்சு நடத்த முதல்-மந்திரி என்ன விவசாயியா?. இவ்வாறு பதில் கிடைக்காமல் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. இதனால் தான் எங்கள் மந்திரிகள் மந்திரிசபை கூட்டத்தை புறக்கணித்தார்கள்.

இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்

இதனிடையே, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை பூட்டு போட்டு பூட்டி நூதன முறையில் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, பீட் மாவட்டம் மஜல்காவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. தேஷ்முக்கின் வீட்டை விவசாயிகள் வெளிப்புறமாக பூட்டினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆளும் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Next Story