வருகிற 11–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை


வருகிற 11–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை
x
தினத்தந்தி 8 Jun 2017 4:00 AM IST (Updated: 8 Jun 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 11–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை மேம்பாலம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளை தொடங்கிவைக்கிறார்

ஈரோடு,

ஈரோட்டில் வருகிற 11–ந் தேதி நடைபெறும் விழாவில் மேம்பாலம் மற்றும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

முதல்–அமைச்சர் வருகை

ஈரோடு மாநகர மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக இருப்பது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் கட்டுவது, ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வருவது. இந்த 2 திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த திட்டங்களுக்கான வரைவு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.

தற்போது இந்த பணிகளை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விழா வருகிற 11–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

மேம்பால பணிகள் தொடக்கவிழா அரசு ஆஸ்பத்திரி அருகே எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா பகுதியில் நடைபெற உள்ளது. அந்த இடத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று பார்வையிட்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

மேம்பாலம்– குடிநீர் திட்டம்

ஈரோடு மக்களின் நீண்டகால கோரிக்கைகளை முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றித்தருவேன் என்று உறுதி அளித்தார். அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இதற்காக வருகிற 11–ந் தேதி ஈரோடு வரும் அவர் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் சுமார் ரூ.75 கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ள மேம்பாலத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைக்கிறார்.

மேலும் ரூ.450 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ள ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

ரூ.796 கோடி

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டல் வேளாளர் கல்லூரி கலையரங்கில் நடக்கிறது. இந்த விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.271 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் பல வளர்ச்சித்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்துக்கு மொத்தம் ரூ.796 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

நிகழ்ச்சியின்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான், கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story