முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை சினிமா படம் ஆகிறது அனுபம்கெர் நடிக்கிறார்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை சினிமா படம் ஆகிறது அனுபம்கெர் நடிக்கிறார்
x
தினத்தந்தி 8 Jun 2017 4:21 AM IST (Updated: 8 Jun 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. மன்மோகன் சிங் வேடத்தில் இந்தி நடிகர் அனுபம்கெர் நடிக்கிறார்.

மும்பை,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. மன்மோகன் சிங் வேடத்தில் இந்தி நடிகர் அனுபம்கெர் நடிக்கிறார்.

முன்னாள் பிரதமர்

பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் வாழ்க்கையை சினிமா படமாக்கும் போக்கு திரையுலகில் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற படங்கள் நன்றாக ஓடி வசூலும் குவிக்கின்றன.

டாக்டர் அம்பேத்கர், கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், டோனி, சச்சின் தெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், சந்தன கடத்தல் வீரப்பன், நடிகை சில்க் சுமிதா ஆகியோர் வாழ்க்கை சினிமா படமாக வந்துள்ளது. தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது.

வாழ்க்கை படமாகிறது

மன்மோகன் சிங் இந்தியாவின் 14-வது பிரதமராக பணியாற்றினார். 1991 முதல் 1996 வரை நரசிம்மராவ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்தார். சிறந்த பொருளாதார வல்லுனராகவும் திகழ்ந்தார். மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் செயல்பட்டார். இந்தியாவில் தாராள மயமாக்கல் கொள்கையின் தொடக்கத்தில் இவர் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து அவரிடம் ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய்பாரு ‘த ஆக்சிடன்சியல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அடிப்படையில் மன்மோகன் சிங் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் மன்மோகன் சிங்கின் சிறுவயது வாழ்க்கை அரசியல் பிரவேசம், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது, அவரது சாதனைகள் போன்ற அனைத்து விஷயங்களும் இடம்பெறுகிறது.

அனுபம்கெர்

இந்த படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் 62 வயது அனுபம்கெர் நடிக்கிறார். விஜய் ரத்னாகர் டைரக்டு செய்கிறார். ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதுகிறார். இந்த படத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.

மன்மோகன் சிங் வாழ்க்கை கதை படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அனுபம்கெர் கூறினார்.

Next Story