நண்பரின் செல்போன் திருடிய தொழிலாளி சிறையில் அடைப்பு


நண்பரின் செல்போன் திருடிய தொழிலாளி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2017 5:24 AM IST (Updated: 8 Jun 2017 5:24 AM IST)
t-max-icont-min-icon

நெட்டப்பாக்கம் அருகே நண்பரின் செல்போனை திருடி நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெட்டப்பாக்கம், 

நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் ராஜு. இவருடைய நண்பர் தினகரன் (வயது 23), சுமைத்தூக்கும் தொழிலாளி. கடந்த 29-ந் தேதி ராஜுவின் வீட்டிற்கு சென்றபோது, அவர் தூங்கிக்கொண்டு இருந்ததையடுத்து தினகரன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த ராஜுவின் செல்போனை காணவில்லை. இதுபற்றி தினகரனிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறி விட்டார். இதையடுத்து ராஜுவை சந்திப்பதை தினகரன் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜுவை பார்க்க அவரது வீட்டுக்கு தினகரன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் தனது செல்போனின் கவர் மட்டும் தனியாக இருந்ததை கண்டு ராஜு அதிர்ச்சி அடைந்தார்.

சிறையில் அடைப்பு

இதுபற்றி கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் தினகரன் மீது நெட்டப்பாக்கம் போலீசில் ராஜு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனிடம் விசாரித்ததில், ராஜுவின் செல்போனை திருடிவிட்டு, எதுவும் தெரியாததுபோல் நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து தினகரனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கரையாம்புத்தூரில் உள்ள ஒரு செல்போன் சர்வீஸ் கடையில் இருந்து ராஜுவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story