அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு ஜூலை 1-ந்தேதி முதல் அமல்


அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு ஜூலை 1-ந்தேதி முதல் அமல்
x
தினத்தந்தி 8 Jun 2017 5:27 AM IST (Updated: 8 Jun 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

அரசு அலுவலகங்களில் ஜூலை 1-ந்தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் சட்டபேரவை, ஆட்சியாளர், அமைச்சரவை, நீதி நிர்வாகம், தேர்தல்கள், விற்பனை வரி, அரசு செயலகம், கருவூலம் மற்றும் கணக்குகள் நிர்வாகம், காவல், சிறைச்சாலைகள், ஓய்வு அனுகூலங்கள், செய்தி, விளம்பரம், அரசு பணியாளர்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அவர் கூறியதாவது:-

புதுவை சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது. கடந்த ஆட்சியில் பல இடங்களை பார்த்து ஒரு இடத்தை ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுத்தார்கள். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நானும் பல மாநிலங்களுக்கு சென்று பார்த்துள்ளேன். மிக அருமையாக கட்டிடம் கட்டியுள்ளனர். அதேபோல் புதிய சட்டமன்றம் கட்ட நடவடிக்கை எடுப்போம்.

வேலைக்கே வராதவர்களுக்கு சம்பளம்

முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதித்துறை அனுமதி அளித்ததும் அதை சட்டமன்றத்தில் வைத்து உயர்த்தி தருவோம். அதேபோல் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளங்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துள்ளோம். அதற்கும் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவோம். ஆட்சியாளர்களின் நிலை குறித்து எம்.எல்.ஏ.க்கள் பல்வேறுவித கருத்துகளை தெரிவித்தனர். அதிகாரிகள் தங்கள் பணிகளை வேகமாக செய்யவேண்டும். கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஊழியர்கள் தாமதமில்லாம சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும். கடைநிலை ஊழியர்கள் பலர் வேலைக்கே வராமல் இருப்பதும், அதை அதிகாரிகள் கண்காணிக்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக அமுதசுரபியில் உள்ள துணிக்கடையில் 18 பேர் வேலை செய்கின்றனர். அங்கு ஒருமுறை ஆய்வுக்கு சென்றபோது ஒரே ஒருவர்தான் பணியில் இருந்தார். அந்த துணிக்கடையில் மாத விற்பனை ரூ.1½ லட்சம்தான். ஆனால் சம்பளமாக மட்டும் ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் வேலைக்கே வராமல் 300 பேர் சம்பளம் வாங்குகின்றனர்.

பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு

அதிகாரிகள் ஒத்துழைத்தால்தான் புதுச்சேரியில் வளர்ச்சியை காணமுடியும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கேட்கும் அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு வைக்கவேண்டும் என்றால் ஏற்றுக்கொள்வதில்லை. அரசு அலுவலகங்களில் நானும் அமைச்சர்களும், பலமுறை ஆய்வுக்கு சென்றதால் ஓரளவுக்கு அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரத்தொடங்கியுள்ளனர். வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு வைக்கப்படும்.

அதேபோல் அரசு ஊழியர்கள் தங்களது பணிநேரத்தில் சட்டமன்ற வளாகத்துக்கு வரக்கூடாது. தங்களது குறைகளை தங்கள் துறையின் உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர் ஆகியோரிடமே தெரிவிக்கவேண்டும். அதன்பிறகும் முடியவில்லை என்றால் எனக்கும், அமைச்சர்களுக்கும் மனுக்கள் அனுப்பவேண்டும். தங்களது அலுவலக பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் எங்களை சந்திக்க வரக்கூடாது. அதிமுக்கியம் என்றால் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசலாம்.

ஐகோர்ட்டு கிளை

புதுவை, காரைக்காலில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுவையில் ஐகோர்ட்டு கிளையோ, தனி ஐகோர்ட்டோ கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு வழக்குகளில் ரவுடிகள் சாட்சிகளை மிரட்டியதால் வழக்கு தள்ளுபடியாகி உள்ளது. இதுபோன்று நேராதவண்ணம் கண்காணிக்க கூறியுள்ளேன். கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு இருந்தபோது உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது, வார்டுகளை பிரிப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

புதுவையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விவரங்களை தருமாறு மத்திய கணக்கெடுப்புதுறைக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. இதற்கிடையே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

வெளி மாநிலங்களுக்கு ரவுடிகள் ஓட்டம்

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தும்போது ஏற்படும் இழப்பினை 5 ஆண்டுகளுக்கும் மேல் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். வணிகவரித்துறையில் பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள், மதுபான விற்பனையாளர்கள் செலுத்தாமல் உள்ள வரிபாக்கியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் ஆட்சி வந்தபின் குற்றங்கள் குறைந்துள்ளன. ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை காரணமாக அவர்கள் வெளிமாநிலங்களுக்கு ஓட்டம்பிடித்து விட்டார்கள். கடந்த காலங்களைப்போல் பண்டிகை காலங்களில் நோட்டு எடுத்துக்கொண்டு போலீசார் வசூலுக்கு சென்றால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளோம். இப்போது போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். 

Next Story