எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை கவர்னர் மாளிகை கண்காணிக்கும் கவர்னர் கிரண்பெடி உறுதி
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கையை கவர்னர் மாளிகை கண்காணிக்கும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் கவர்னருக்கும், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு:-
மனசாட்சியை கேளுங்கள்
புதுவை மாநிலத்தில் தகுதிவாய்ந்த மாணவர்கள் அடைந்து வரும் துயரங்கள் நமக்கு தெரிகிறது. இதை முழுமையாக தடுக்க இயலும். மூத்த அதிகாரிகள் தீவிரமாக செயல்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நான் சென்டாக் அலுவலகத்தினை பார்வையிட்டபோது பெற்றோர்கள் என்னிடம் ஏராளமான புகார்களை தெரிவித்தனர்.
மாணவர்களின் குறைகளை அதிகாரிகள் கவனித்து செயல்பட்டு இருந்தால் இந்தநிலையை முன்பே சரிசெய்து இருக்கலாம். நாம் எதற்காக உள்ளோம் என்பது தொடர்பாக அதிகாரிகள் தங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக அச்சப்படவும் தேவை இல்லை.
கண்காணிக்கும்
மக்களை சந்திக்கவும் அதிகாரிகள் நேரம் ஒதுக்கவேண்டும். நாம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது எளிய மனிதர்களுக்கும் சேவை செய்யும் பொறுப்பாளர்கள் என்பதை உணரவேண்டும். அடுத்ததாக இளநிலை பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) மாணவர் சேர்க்கைக்கு தயாராக உள்ளோம்.
இந்த சென்டாக் மாணவர் சேர்க்கையை கவர்னர் மாளிகை கண்காணிக்கும். ஏதாவது புகார் என்றால் உடனடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story