சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் மாதர் சங்க செயலாளர் பேட்டி


சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் மாதர் சங்க செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2017 5:35 AM IST (Updated: 8 Jun 2017 5:35 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாதர் சங்க செயலாளர் ராசாத்தி கூறினார்.

சேலம்,

சேலம் அருகே தனியார் பஸ்சில் 15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று அனைத்திந்திய மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு ஆகியவை இணைந்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராசாத்தி தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் ஜோதிலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சிறுமியை கற்பழித்த வழக்கில் கைதானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், நிர்பையா நிதியம் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

தண்டனை வழங்க வேண்டும்

பின்னர் மாவட்ட செயலாளர் ராசாத்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் அருகே தனியார் பஸ்சில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று விட்டோம். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியை பார்க்க எங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. சிறுமியை கற்பழித்தவர்களை போலீசார் உடனே பிடித்துவிட்டனர். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம்தாழ்த்தி வந்தது ஏன்? என்று தெரியவில்லை.

எங்களுடைய கோரிக்கைக்கு பின்னர் அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதலுதவி கூட அளிக்காமல், அடையாளம், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டதாக கருதுகிறோம். மேலும் இந்த வழக்கில் கைதான டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு விரைவில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சிறுமிக்கு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிர்பையா நிதியம் மூலம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story