ரூ.2½ லட்சம் மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்


ரூ.2½ லட்சம் மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 8 Jun 2017 11:22 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ.2½ லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இடைத்தரகர் சுகேஷ் டெல்லியிலிருந்து ரெயில் மூலம் அழைத்து வரப்பட்டு

கோவை,

கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இரட்டை இலை சின்னம்

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷை டெல்லி போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் இடைத்தரகர் சுகேஷ் மீது கோவையில் சைபர் கிரைம் போலீசில் ஒரு வழக்கு பதிவாகி இருந்தது. அந்த வழக்கு விசாரணைக்காக கோவை கோர்ட்டில் சுகேஷ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

மோசடி வழக்கு

கோவை கணபதியை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 40). இவர் சமையல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 21.12.2010-ல் ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. போனில் பேசியவர் தான் கர்நாடக மாநில முதல்-மந்திரி அலுவலகத்திலிருந்து இணை செயலாளர் சுகேஷ் (35) என்ற பிரகாஷ் பேசுகிறேன் என்றும் பெல்லாரி மாநகராட்சியில் சமையல் உபகரணங்கள் டெண்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளதா? என்று அவர் கேட்டார். அதற்கு ராஜவேல் தனக்கு விருப்பம் இருப்பதாகவும் ஆனால் உடனே பெல்லாரி வர முடியாது என்றும் கூறினார்.

அதற்கு போனில் பேசிய சுகேஷ் நான் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் அந்த டெண்டரை நான் உங்களுக்கு எடுத்து தருகிறேன் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட ராஜவேல் ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் பணத்தை 3 தவணைகளாக சுகேஷ் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் அதன்பின்னர் ராஜேவேலுக்கு டெண்டர் கிடைக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பி கேட்டு பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

இடைத் தரகர் கைது

இதனால் ஏமாற்றம் அடைந்த ராஜவேல் 31.1.2011-ல் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெங்களூரு பவானி நகரை சேர்ந்த சுகேஷ் என்கிற பிரகாஷ் என்கிற பாலாஜியை கைது செய்தனர். அவரது தந்தை சந்திரசேகரின் கணக்கில் தான் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதால் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் சுகேஷ் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

அதன்பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு கோவை 2-ம் எண் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் சுகேஷ் இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். ஆனால் சுகேசின் தந்தை சந்திரசேகர் கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இதை தொடர்ந்து சுகேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி மாஜிஸ்திரேட்டு கடந்த 9.1.2017 அன்று பிடிவாரண்டு பிறப்பித்தார்.

கோவை கோர்ட்டில் ஆஜர்

இதற்கிடையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத் தரகர் சுகேசை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையில் இறங்கினார்கள். அதன்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு சுகேசிற்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது குறித்த தகவலை தெரிவித்தனர்.

அதன்பேரில் டெல்லி போலீசார் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகேசை ரெயில் மூலம் நேற்றுமதியம் 1.30 மணியளவில் கோவை அழைத்து வந்தனர். அவரை கோவை 2-ம் எண் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சுகேஷ் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டார். இதை தொடர்ந்து சுகேசை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் சுகேஷ் பலத்த பாதுகாப்புடன் நேற்று மதியம் 1.45 மணியளவில் கோவையில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் டெல்லிக்கு ரெயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்று கோவை போலீசார் தெரிவித்தனர். இடைத்தரகர் சுகேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story