தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் விநியோகம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் விநியோகம்  கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Jun 2017 3:00 AM IST (Updated: 8 Jun 2017 11:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 1¼ லட்சம் மாணவ–மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 1¼ லட்சம் மாணவ–மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. பாடப்புத்தகங்கள் விநியோகத்தை நேற்று கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

இலவச பாடப்புத்தகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 84 அரசு பள்ளிகள், 131 அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கூடம் திறந்த உடன் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 90 மாணவ, மாணவிகளுக்கு 2017–2018–ம் ஆண்டுக்கான இலவச பாட புத்தகங்கள், 86 ஆயிரத்து 990 பேருக்கு பாடக்குறிப்பேடு மற்றும் 26 ஆயிரத்து 218 பேருக்கு சீருடைகள் வழங்கப்படுகிறது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு முதன்மை கல்வி அலுவலர் அனிதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டு இலவச பாடநூல், பாடக்குறிப்பேடு, சீருடைகளை சில மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

முதன்மை மாவட்டம்

தமிழ்நாடு அரசு மாணவ–மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை உலக தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கத்தில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மாணவ–மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதற்காக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச சைக்கிள் என பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள், படிப்பில் மட்டும் அல்ல, விளையாட்டு துறையிலும் அதிகம் கவனம் செலுத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். வரும் கல்வியாண்டில் மாநிலத்தில் கல்வியில் முதன்மை மாவட்டமாக நமது மாவட்டம் திகழ மாணவ, மாணவிகள் கவனமாக படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் செந்தூர்கனி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சங்கரய்யா, சீனிவாசன், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story