மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: பெண் சாவு; கணவர் படுகாயம் தப்பி ஓடிய கார் டிரைவருக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: பெண் சாவு; கணவர் படுகாயம் தப்பி ஓடிய கார் டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jun 2017 1:30 AM IST (Updated: 9 Jun 2017 12:00 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பெண் பலியானார். கணவர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி,

புதுக்கோட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பெண் பலியானார். கணவர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கூலி தொழிலாளி

தூத்துக்குடி ராஜவ் நகரை சேர்ந்த சுப்பையா மகன் செல்வராஜ் (வயது 63). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்லம்மாள் (56). இத்தம்பதியர் நேற்று காலையில், புதுக்கோட்டை அருகே அல்லிகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜவ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை செல்வராஜ் ஓட்டினார். மோட்டார் சைக்கிள் தூத்துக்குடி– நெல்லை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

கார் மோதி பெண் சாவு

புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த செல்வராஜ், அல்லிகுளம் செல்லும் மங்களகிரி விலக்கு சாலையில் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த கார், எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். செல்வராஜ் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் கிடந்தார். கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

கார் டிரைவருக்கு வலைவீச்சு

இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த செல்வராஜை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான செல்லம்மாள் உடலை போலீசார் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story