ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் பேட்டி


ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 12:01 AM IST)
t-max-icont-min-icon

‘மத்திய அரசு அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்வோம்’ என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் கே.நாராயணா கூறினார்.

கோவை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் கோவையில் உள்ள மாவட்ட அலுவலகமான ஜீவா இல்லத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் பி.பத்மாவதி, கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில் தேசிய செயலாளர் டாக்டர் கே.நாராயணா, மூத்த தலைவர் தா.பாண்டியன், சி.மகேந்திரன், என்.பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தேசிய செயலாளர் டாக்டர் கே.நாராயணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் புறக்கணிப்பார்கள்

“நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் கூட வாக்குகள் கிடைக்கும். ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தால் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி மீது டெல்லியில் சங் பரிவார் கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயற்சித்தது கண்டனத்துக்குரியது. ஆர்.எஸ்.எஸ்.சின் இந்த தாக்குதல் மூலம் பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சி புலப்படுகிறது.

ஜனநாயகத்திற்கும், கட்சிகளுக்கும் ஆளும் பா.ஜனதா அரசு மரியாதை அளிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கும் இதே மனநிலை தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே மாற்று கட்சியினர் மீதான தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும்.

விவசாயிகள் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது மத்தியபிரதேச அரசின் தவறான முடிவு. அதன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்துறை மந்திரி பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

விளைபொருட்களுக்கு உரிய விலை கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு 13.5 லட்சம் கோடி ரூபாயை பெரு முதலாளிகளுக்கு வரிசலுகைகளாக வழங்கியுள்ளது. தமிழகத்தில் காலூன்ற அனைத்து முயற்சிகளையும் பா.ஜனதா அரசு எடுத்தாலும் அதனால் கட்சியை வளர்க்க முடியாது.

பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பேச வேண்டும். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யாவிட்டால் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும். பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது.

நாட்டில் பல்வேறு இடங்களில் பிரச்சினைகள் நடக்கும் இடங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்களை அனுமதிக்காதது மத்திய அரசின் வாடிக்கையாகி விட்டது. இது அவர்கள் தவறு இழைத்திருப்பதை உறுதி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story