மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
செங்குன்றத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்,
செங்குன்றம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூபதி. வியாபாரி. இவரது மனைவி கவுசல்யா (வயது 45). இவர்களுடைய ஒரே மகன் பிரசாத் (24). மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட பிரசாத்தை, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இன்றி, கடந்த 5–ந் தேதி பிரசாத் இறந்தார். ஒரே மகன் இறந்ததால், கவுசல்யா சோகத்தில் இருந்து வந்தார். சரியாக சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் விரக்தியாக இருந்து வந்ததாக தெரிகிறது.
கிணற்றில் குதித்து தற்கொலை
மகன் இல்லாத உலகத்தில் வாழ விரும்பாத கவுசல்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கவுசல்யா திடீரென குதித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் கிணற்றில் இறங்கி அவரை காப்பாற்றினர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கவுசல்யா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்குன்றம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story