ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்குரெயிலில் 1,595 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது


ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்குரெயிலில் 1,595 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து சரக்குரெயிலில் 1,595 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகின. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டும் நெல் சாகுபடி நடைபெற்றது.

இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம்.

உர மூட்டைகள்

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சரக்குரெயிலில் 29 வேகன்களில் 1,595 டன் யூரியா உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்றுகாலை கொண்டு வரப்பட்டன. பின்னர் உர மூட்டைகளை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றினர். இதையடுத்து இந்த உர மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. இந்த உரம் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும்.

இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 ஆயிரத்து 273 எக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உரம் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் உரத்தேவைக்காக 7 ஆயிரத்து 373 டன் யூரியாவும், 6 ஆயிரத்து 700 டன் டி.ஏ.பி.யும், 3 ஆயிரத்து 976 டன் பொட்டாஷ் உரமும், 4 ஆயிரத்து 342 காம்ப்ளக்ஸ் உரமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றனர்.


Related Tags :
Next Story