‘பிளாஸ்க்’கில் மறைத்து 1 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தல் ஆந்திர வாலிபர் கைது
இலங்கையில் இருந்து சென்னைக்கு ‘பிளாஸ்க்’ கில் மறைத்து 1 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்த ஆந்திர வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அதிகாலை விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த காஜாசபீர் (வயது 35) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.
1 கிலோ தங்கக்கட்டிகள்
ஆனால் அவர் கொண்டு வந்த ‘பிளாஸ்க்’ வழக்கமான எடையை விட சற்று அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அதனை கழற்றி பார்த்தனர். அப்போது அந்த ‘பிளாஸ்க்’கில் சூடு குறை£மல் இருப்பதற்காக வைக்கப்படும் தெர்மாகோலுக்கு பதிலாக, தங்கக்கட்டிகள் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் இருந்த 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட 11 தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.33 லட்சம் ஆகும். இதுதொடர்பாக காஜாசபீரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story