சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைவர் அய்யாக்கண்ணு பேச்சு


சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைவர் அய்யாக்கண்ணு பேச்சு
x
தினத்தந்தி 8 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-09T00:28:48+05:30)

சேத்துப்பட்டு பழம்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல்மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர்.

சேத்துப்பட்டு,

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 292 விவசாயிகளிடம் இருந்து ரூ.1 கோடியே 48 லட்சத்துக்கு சேத்துப்பட்டை சேர்ந்த வியாபாரி கார்த்தி என்பவர் நெல் கொள்முதல் செய்து பணம் இல்லாத காசோலையை வழங்கி மோசடி செய்தார். இதற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் கார்த்தி, ராஜசேகர், கார்த்தியின் தந்தை சீனி, கார்த்தியின் தம்பி கண்ணன் ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் விற்பனை செய்து பணம் கிடைக்காத விவசாயிகள், பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினார்கள். அதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்புகள், அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை திறக்கப்படவில்லை.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க வேண்டும்
இந்த நிலையில் தென் இந்திய நதிகள் இணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணு சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று வந்தார். பின்னர் அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளிகள், அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் விவசாயிகள் மத்தியில் பேசுகையில், ‘ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறப்பது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டரை சந்தித்து பேசி விரைவில் தீர்வு காண முயற்சி செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் நாட்களில் வங்கியில் விவசாயத்துக்கு நகையை அடகு வைத்து வாங்கிய கடன், பயிர்க்கடன் ஆகியவற்றுக்காக ஜப்தி செய்வது, ஏலம் விடுவது தடுக்கப்படும்’ என்றார்.

அப்போது மாநில செயலாளர் தினேஷ், பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story