‘குடி’மகன்கள் அட்டகாசம்: டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்


‘குடி’மகன்கள் அட்டகாசம்: டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடை அருகே ‘குடி’மகன்கள் அட்டகாசத்தால் கடையை மூடக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊழியர்கள் கடையை திறக்காமல் சென்றனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் நகர பகுதியில் டாஸ்மாக் கடை எதுவும் இல்லை. ஆம்பூரை ஒட்டியுள்ள ஆலாங்குப்பம் மற்றும் பாலாற்று பகுதியில் உள்ள வடகரை ஆகிய பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் இந்த கடைகளில் ‘குடி’மகன்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வடகரை பகுதியில் அடிக்கடி ‘குடி’மகன்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அந்த வழியாக சென்ற தனியார் ‘ஷூ’ கம்பெனி வேனை ‘குடி’மகன்கள் கல்வீசி தாக்கினர். இதில் டிரைவர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

‘குடி’மகன்கள் செய்யும் அட்டகாசத்தால் அப்பகுதியில் தினமும் பிரச்சினை ஏற்படுவதாக கூறி நேற்று முன்தினம் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீசாரின் சமாதானத்தை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

2-வது நாளாக போராட்டம்

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் வடகரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் கடையை திறக்க டாஸ்மாக் ஊழியர்கள் வந்தனர். பொதுமக்களின் போராட்டத்தை அறிந்த அவர்கள் கடையை திறக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story