வளசரவாக்கத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடியவர் கைது
வளசரவாக்கத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடியவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆவடி,
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் பூச்சத்திப்பேடு பிரதான சாலையில் வசிப்பவர் வெங்கட்ரமணா (வயது 28). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏசுபாபு (30), கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை மொத்தமாக சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து 4 மூட்டை முடியை விற்பனை செய்வதற்காக சென்னைக்கு கொண்டு வந்த ஏசுபாபு, அதனை வெங்கட்ரமணா வீட்டில் வைத்திருந்தார். கடந்த மாதம் 18–ந்தேதி ஏசுபாபுக்கு அறிமுகமான 4 பேர் முடி வாங்குவதாக கூறி அதை பார்த்து சென்றனர். பின்னர் மறுநாள் இரவு 4 மூட்டைகளும் திருட்டு போனது.
ஒருவர் கைது
இதுகுறித்து ராயலா நகர் போலீசில் புகார் அளித்த ஏசுபாபு, முடியை பார்ப்பதற்காக வந்தவர்களின் புகைப்படங்களையும் போலீசாரிடம் காண்பித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், முடியை திருடிவிட்டு ஆந்திராவில் பதுங்கி இருந்த, சென்னை மண்ணடியை சேர்ந்த மாகிம் அபுபக்கர் (40) என்பவரை ராயலா நகர் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர். அவரிடம் இருந்து 4 முடி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story