அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
நெல்லை,
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சிவகாம சுந்தரி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மாணவர் சேர்க்கைநெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1997–ம் ஆண்டு தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை வாயிலாக தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேர்ந்து பயில்வதற்கு மாணவ, மாணவிகளுக்கு 12 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பயில் வேண்டும்.
இந்த பள்ளியில் 2017–18–ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1–ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பஸ் வசதி, ரெயில் கட்டண சலுகை, தங்கும் விடுதி வசதி, மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை மற்றும் இலவச சீருடை, இலவச சைக்கிள், இலவச காலணி ஆகியவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சான்றிதழ்நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிமூப்பு அடிப்படையில் இசைப்பள்ளியில் மற்றும் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
எனவே மாணவ, மாணவிகள் நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து இசையினை கற்று இசை ஆசிரியர்களாகவும், கலை வல்லுநர்களாகவும் உருவாகும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.