மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் பாதிப்பு: சென்னையில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் பாதிப்பு:  சென்னையில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-09T01:08:03+05:30)

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, 

மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், ‘ஆன்–லைன்’ மூலம் அரசே மணல் விற்பனையில் ஈடுபட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய கட்டுமான வல்லுநர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் வி.ராஜகோபால், பொருளாளர்  ஜி.அகத்தியன், கட்டுமான வல்லுநர் சங்கத்தின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது எஸ்.யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக அரசே மணல் விற்பனையை நேரடியாக ஏற்று நடத்தும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து ஒரு மாதம் ஆகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மணல் தட்டுப்பாட்டால் 75 சதவீதம் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் கட்டிட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். 55 ஆயிரம் லாரிகள் மணலுக்காக குவாரிகளில் காத்து கிடக்கின்றன. மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜூலை முதல் வாரத்தில் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story