விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக சித்தராமையா–ஈசுவரப்பா இடையே கடும் வாக்குவாதம் கர்நாடக மேல்–சபையில் பரபரப்பு


விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக சித்தராமையா–ஈசுவரப்பா இடையே கடும் வாக்குவாதம் கர்நாடக மேல்–சபையில் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 3:30 AM IST (Updated: 9 Jun 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கர்நாடக மேல்–சபையில் சித்தராமையா–ஈசுவரப்பா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கர்நாடக மேல்–சபையில் சித்தராமையா–ஈசுவரப்பா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய கடன் தள்ளுபடி

விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கர்நாடக மேல்–சபையில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அதாவது எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா எழுந்து பேசும்போது, வறட்சி குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். ஈசுவரப்பா பேசுகையில், “உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலங்களில் அங்குள்ள பா.ஜனதா அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளன. அதே போல் சித்தராமையா விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜெகதீஷ் ஷெட்டர் முதல்–மந்திரியாக இருந்தபோது விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது“ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சித்தராமையா, “விவசாய கடனை ஜெகதீஷ் ஷெட்டர் தள்ளுபடி செய்தார். அந்த கடனை நாங்கள் வந்து தான் திருப்பி செலுத்தினோம்“ என்றார். மீண்டும் பேசிய ஈசுவரப்பா, “சரி, நீங்கள் கடனை தள்ளுபடி செய்யுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கடனை திருப்பி செலுத்துகிறோம்“ என்றார்.

காங்கிரஸ் வெற்றி பெறும்

அப்போது மீண்டும் குறுக்கிட்ட சித்தராமையா, “நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் தான் கடனை திருப்பி செலுத்துவீர்கள்?. அதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும்“ என்றார். இது சாத்தியம் இல்லை என்று ஈசுவரப்பா கூறினார். தொடர்ந்து பேசிய சித்தராமையா, “குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று நீங்கள் தானே கூறினீர்கள். அது இப்போது என்ன ஆனது?. அந்த முன்னோட்டத்தின் அடிப்படையில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்“ என்றார்.

அப்போது பேசிய ஈசுவரப்பா, “மத்தியபிரதேச மாநிலத்தில் கூட விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது“ என்றார். இதற்கு பதிலளித்த சித்தராமையா, “மத்தியபிரதேசத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை. அங்குள்ள அரசு விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு உயிரை பறிக்கிறது. முதலில் மத்திய அரசு கர்நாடகத்தில் உள்ள ரூ.52 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்யட்டும். அதன் பிறகு நாங்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்கிறோம்“ என்றார்.

கடும் வறட்சி நிலவுகிறது

அப்போது குறுக்கிட்ட மேல்–சபை தலைவர் சங்கரமூர்த்தி, “கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அதுபற்றி பேசுங்கள்“ என்றார். வறட்சி மீது விவாதம் நடைபெறும்போது முதல்–மந்திரி சபையில் இருக்க வேண்டும் என்று ஈசுவரப்பா கூறினார். அதற்கு பதிலளித்த சித்தராமையா, வருவாய்த்துறை மந்திரியாக இருக்கும் காகோடு திம்மப்பா மூத்த மந்திரி. அவர் இங்கு இருப்பார்“ என்றார்.

விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக சித்தராமையா– ஈசுவரப்பா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் மேல்–சபையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story