பாதாள சாக்கடையை துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்த விவகாரம் கிராம பஞ்சாயத்து தலைவி மீது வழக்கு; அதிகாரி பணி இடைநீக்கம்


பாதாள சாக்கடையை துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்த விவகாரம் கிராம பஞ்சாயத்து தலைவி மீது வழக்கு; அதிகாரி பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2017 2:00 AM IST (Updated: 9 Jun 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

கிராம பஞ்சாயத்து தலைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சட்டசபையில் மந்திரி எச்.கே.பட்டீல் தெரிவித்தார்.

பெங்களூரு,

பாதாள சாக்கடையை துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் கிராம பஞ்சாயத்து தலைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சட்டசபையில் மந்திரி எச்.கே.பட்டீல் தெரிவித்தார்.

மந்திரி எச்.கே.பட்டீல் பதில்

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தை தொடர்ந்து பூஜ்ஜிய நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து, மைசூரு மாவட்டத்தில் பாதாள சாக்கடை குழியில் துப்புரவு தொழிலாளர்கள் இறங்கி மலத்தை சுத்தம் செய்த விவகாரத்தை எழுப்பி பேசினார். இதற்கு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி எச்.கே.பட்டீல் பதிலளிக்கையில் கூறியதாவது:–

மைசூரு தாலுகா சாமுண்டி மலை கிராம பஞ்சாயத்து எல்லையில் வரும் தாவரகட்டே கிராமத்தில் துப்புரவு தொழிலாளர்கள் பாதாள சாக்கடை குழியில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் நடந்துள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி மைசூரு மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.

மேலோட்டமாக தெரியவந்துள்ளது

மைசூரு நகரத்தை ஒட்டியுள்ள சாமுண்டி மலை கிராம பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களுக்கு பாதாள சாக்கடை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் இந்த வசதியை செய்துள்ளது. அந்த கிராம பஞ்சாயத்து தலைவி கீதா என்பவர், கடந்த 6–ந் தேதி தனது வீடு அமைந்துள்ள தெருவில் பாதாள சாக்கடை குழியில் துப்புரவு தொழிலாளர்கள் செலுவ, கணேஷ் ஆகியோரை இறக்கி சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

அந்த இடத்திற்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாதாள சாக்கடை குழியில் துப்புரவு தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியை செய்தது மேலோட்டமாக தெரியவந்துள்ளது. கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியை தலைவி கீதா தொடர்பு கொண்டு சுத்தம் செய்வது பற்றி கூறியபோது, பாதாள சாக்கடை குழிகளை சுத்தம் செய்யவே துப்புரவு தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

பணி இடைநீக்கம்

பாதாள சாக்கடை குழியில் இறங்கி துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்த வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியாகியுள்ளது. இது உண்மை என்று தெரிய வந்திருப்பதால், கிராம பஞ்சாயத்து தலைவி கீதா மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ஆனந்த் ஆகியோர் மீது மைசூரு கிருஷ்ணராஜா சாமுண்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ஆனந்த் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாநில அரசு தீவிரமாக கருதுகிறது. வரும் காலங்களில் மாநிலத்தில் எந்த கிராம பஞ்சாயத்துகளிலும் பாதாள சாக்கடை குழிகளில் துப்புரவு தொழிலாளர்களை இறக்கி சுத்தம் செய்யும் பணியை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். நகர பகுதிகளிலும் இத்தகைய சம்பவங்கள் அரங்கேறாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று நான் உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.

ஜெகதீஷ் ஷெட்டர் பேச்சு

முன்னதாக பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “மனிதர்கள் மனித மலத்தை அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்–மந்திரியின் சொந்த தொகுதியில் பாதாள சாக்கடை குழியில் துப்புரவு தொழிலாளர்களை இறக்கிவிட்டு மலத்தை சுத்தம் செய்துள்ளனர். அவர்களை கிராம பஞ்சாயத்து தலைவி கட்டாயப்படுத்தி இதை செய்ய வைத்துள்ளார். இது சரியல்ல. சமீபத்தில் பெங்களூருவில் இவ்வாறு பாதாள சாக்கடை குழியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் மூச்சுத்திணறி மரணம் அடைந்தனர். இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?. இந்த சம்பவம் நமக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.


Next Story