தொழிற்சாலைகளில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை


தொழிற்சாலைகளில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகளில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆய்வாளர் பேசினார்.

திருப்பூர்,

சென்னை தொழிலாளர் ஆணையர் பாலசந்திரன் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவ தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கும் வகையில், குழந்தைகள் தொழிலாளர் சட்டம் மற்றும் திருத்தப்பட்ட சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, திருப்பூர் தொழிலாளர் ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், பேக்கரி மற்றும் உணவகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது. அதுபோல் 14 வயது முதல் 18 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினரை அபாயகரமாக தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. இவை குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் சட்டத்தின்படி கடும் குற்றமாகும்.

சிறை தண்டனை

இந்த சட்டத்தை மீறி அவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது 2 தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும். மேலும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டுதல், துண்டு பிரசுரங்களை வழங்குதல் மற்றும் தீவிர ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட எந்த வகையான வணிக நிறுவனங்களாக இருந்தாலும் குழந்தைகளை மற்றும் வளர் இளம் பருவத்தினரையும் பணிகளில் அமர்த்த வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்க பிரதிநிதிகள், திருப்பூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, தாராபுரம் தொழிலாளர் துணை ஆய்வாளர் திருஞானசம்பந்தம், திருப்பூர் உதவி ஆய்வாளர்கள் சண்முகவேலு (1-ம் வட்டம்), வெங்கடாசலம் (2-ம் வட்டம்), பேச்சிமுத்து (3-ம் வட்டம்) உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story