குடிநீர் கேட்டு தோகைமலை ஒன்றிய அலுவவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு தோகைமலை ஒன்றிய அலுவவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Jun 2017 4:30 AM IST (Updated: 9 Jun 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை தெற்கு வருந்திபட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சியில் உள்ள தெற்கு வருந்திபட்டி பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி பொதுமக்களுக்கு மேல் நிலை நீர்தேக்க தொட்டி மூலம் போர்வெல் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யபட்டு வந்தது. இப்பகுதிக்கு கடந்த ஒரு வருடமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் குடிநீர் பிடித்து வந்தனர். கிணறுகளிலும் வறட்சி ஏற்பட்டதால் குடிநீர் கிடைக்க வில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர். இதுகுறித்து தோகைமலை ஒன்றிய அலுவலகம் மற்றும் தோகைமலை ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தெற்கு வருந்திபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

பேச்சு வார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம வளர்ச்சி) மனோகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், தோகைமலை ஊராட்சி செயலாளர் இளங்கோ ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தெற்கு வருந்திபட்டியில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளையும் துண்டிப்பு செய்து குடிநீர் தொட்டி அருகே 10 இடங்களில் மட்டும் பொது குடிநீர் இணைப்பு வழங்கப்படும். தற்போது அனைத்து பொதுமக்களும் இங்கு வந்து குடிநீர் பெற்றுகொள்ளலாம். பின்னர் இந்த பகுதிக்கு மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று புதிய போர்வெல் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை விலக்கி கொண்டு கலைந்து சென்றனர்.


Next Story