மாவட்டம் முழுவதும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்து 444 பேருக்கு வேலைவாய்ப்பு


மாவட்டம் முழுவதும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்து 444 பேருக்கு வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 4:00 AM IST (Updated: 9 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்து 444 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

திண்டுக்கல்,

ஏழை, எளியோர் மற்றும் பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் புதுவாழ்வுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களின் திறனை கண்டறிந்து, வருவாய் தரும் தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும், தொழிலுக்கு தேவையான நிதியினை பெற்று தருவதோடு, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த உதவி செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் புதுவாழ்வு திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சாணார்பட்டி, நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, தெப்பம்பட்டி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 121 ஊராட்சிகளில் புதுவாழ்வு திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்ட செயல்பாட்டிற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு பயிற்சி

மேலும் வாழ்வாதார நிதியின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்பெற்றுள்ளனர். இதேபோல மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு தனிநபர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 262 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கண்டறியப்பட்டனர்.

இவர்களுக்கு கணினி ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், செவிலியர் உதவியாளர், தையல், செல்போன் பழுதுபார்த்தல், சி.என்.சி., பொக்லைன் எந்திரம், கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி உள்ளிட்ட வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் 7 ஆயிரத்து 444 பேர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தொழில் தொடங்க நிதி

இதுமட்டுமின்றி கிராம ஊராட்சிகளில் 121 கிராம கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டு செயல்படுகிறது. மேலும் பால் பண்ணை, ஆடு வளர்ப்பு, ஆயத்த ஆடைகள் தயாரித்தல், காய்கறிகள் மற்றும் மலர்கள் சாகுபடி போன்ற தொழில்களை தொடங்குவதற்கு குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story