வத்தலக்குண்டு நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


வத்தலக்குண்டு நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 8 Jun 2017 9:11 PM GMT)

வத்தலக்குண்டு நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதி ஆகும். தேனி, கொடைக்கானல், குமுளி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இந்த வழியாக தான் வாகனங்கள் செல்கின்றன. இதனால் வத்தலக்குண்டு நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் வத்தலக்குண்டுவில் போக்குவரத்து போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வத்தலக்கண்டு புறவழி சாலை திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. எனினும், வத்தலக்குண்டு நகரில் போக்குவரத்து நெரிசல் இதுவரை குறைந்தபாடில்லை. குறிப்பாக காளியம்மன் கோவில் பகுதியில் காலை, மாலை நேரங்களில் வாகனங் கள் ஆமைவேகத்தில் தான் ஊர்ந்து செல்ல முடிகிறது.

ஆக்கிரமிப்புகள்

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சாலையோர ஆக்கிரமிப்புகள் தான். வத்தலக்குண்டு நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் சாலையோர கடைகளாக காட்சி அளிக்கின்றன. மேலும் பல பகுதிகளில் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலையோர பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் மக்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்.

அதேபோல் இருபக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், சாலைகள் குறுகி கொண்டே செல்கின்றன. இதனால் நேர்எதிரே வரும் வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், ஒருசில மணி நேரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன.

நடவடிக்கை

இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலால் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அவதிப்படுகின்றனர். இதை தவிர்ப்பதற்கு வத்தலக்குண்டு நகர் முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படாத வகையில் தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story