மகனின் நிச்சயதார்த்த விழாவுக்கு வந்தவர் விபத்தில் பலி மேலும் 4 பேர் படுகாயம்


மகனின் நிச்சயதார்த்த விழாவுக்கு வந்தவர் விபத்தில் பலி மேலும் 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:45 AM IST (Updated: 9 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

மகனின் நிச்சயதார்த்த விழாவுக்கு வந்தவர் சரக்கு ஆட்டோ மோதி பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகர்கோவில்,

திருப்பூர் மாவட்டம் தெற்கு தீராம்பாளையம் ஊத்துக்குழி ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 67). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருடைய மகனுக்கும், நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிக்க இருவீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர்.

அதன்படி நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. நிச்சயதார்த்தத்துக்காக சந்திரசேகர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நாகர்கோவில் வந்தார். நேற்று காலையில் சந்திரசேகரும், உறவினர்களும் நிச்சயதார்த்தத்துக்கு பழம் வாங்குவதற்காக பறக்கை ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து கோட்டார் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சரக்கு ஆட்டோ மோதியது

அப்போது, நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற சரக்கு ஆட்டோ ஒன்று திடீரென அவர்கள் மீது மோதியது. இதில் சந்திரசேகர் தூக்கிவீசப்பட்டு, அருகில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி, அந்த லாரியின் அடியில் போய் விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

அவருடைய உறவினர்களான மதுரை திருநகரை சேர்ந்த வரதாச்சாரி (68), ஈரோடு சென்னிமலையை சேர்ந்த தேன்மொழி (32), மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த உஷா (42), மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விமலா (45) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், சுந்தர்சிங் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த 4 பேரையும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் இறந்த சந்திரசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு ஆட்டோ டிரைவரான வடக்குச்சூரங்குடி அருகே உள்ள தட்டான்விளையை சேர்ந்த ஜெயராம் (19) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

திருமண நிச்சயதார்த்தத்துக்கு வந்த இடத்தில் புதுமாப்பிள்ளையின் தந்தை விபத்தில் பலியான சம்பவம் திருமண வீட்டாரிடமும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தினால் நேற்று நடைபெற இருந்த திருமண நிச்சயதார்த்தம் நின்று போனதாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story