திருமண கோஷ்டி சென்ற மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது 30 பேர் காயம்


திருமண கோஷ்டி சென்ற மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது 30 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:30 AM IST (Updated: 9 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே திருமண கோஷ்டி சென்ற மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 பேர் காயம் அடைந்தனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபிக்கண்ணன் (வயது 27). மினி பஸ் டிரைவர். இவருக்கு வாலிகண்டபுரம் சிவன் கோவிலில் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஒரு மினி பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் அ.குடிக்காட்டில் இருந்து வாலிகண்டபுரத்திற்கு புறப்பட்டு சென்றனர். மினி பஸ்சை கண்டக்டர் செல்வராஜ் (30) என்பவர் ஓட்டினார். மினி பஸ் வி.ஆர்.எஸ்.புரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு ஒதுங்க முயற்சித்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

30 பேர் காயம்

இதில் மினி பஸ்சில் பயணம் செய்த அ.குடிக்காட்டை சேர்ந்த காந்திமதி (48), நல்லம்மாள் (48), பிரியா (23), சுரேஷ் (30) உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மினிபஸ்சை ஓட்டி வந்த செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story