மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் உருவபொம்மை எரிப்பு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றதை கண்டித்து, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

 அப்போது, ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத்தின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசும்போது கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், தாக்குதல் சம்பவங்கள் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தொண்டன் இருக்கும் வரை இந்தியாவில் மதவாத சக்திகளை தலைதூக்க விடமாட்டோம். கடந்த 3 ஆண்டுகளில் நரேந்திரமோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தள்ளுமுள்ளு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக பா.ஜ.க. செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத்தின் உருவபொம்மையை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story