அனுமதியற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் தகவல்


அனுமதியற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:00 AM IST (Updated: 9 Jun 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

தேனி,

தேனி மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற வீட்டுமனை பிரிவுகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சித்துறை அலுவலர்கள் மற்றும் வீட்டுமனை விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் நகர் ஊரமைப்பு துறையால் வீட்டுமனைப்பிரிவு அனுமதி பெறாமல், அனுமதியற்ற வீட்டுமனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு, வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், சாலை வசதிகள், பொது இடங்களான பூங்கா, சிறுவர் விளையாடும் இடம் போன்றவை அமைத்துக் கொடுக்கவும், அரசுக்கான வருவாய் இழப்பினை தடுக்கும் வகையிலும் வீட்டுமனை பிரிவுகளை சீர்படுத்தி 6 மாத காலத்திற்குள் வரைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.

30-ந்தேதிக்குள் விண்ணப்பம்

அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் அனுமதியற்ற வீட்டுமனை பிரிவுகள் வைத்து இருக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், வீட்டுமனை விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களை அணுகி வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பித்து வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு வரைமுறைப்படுத்த வீட்டுமனைகளுக்கு மட்டுமே குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் ஓடை வசதி போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும். முறைப்படுத்தப்பட்ட மனைகளை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மதுரை மண்டல நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குனர் (பொறுப்பு) முகம்மதுஅலி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சேதுராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அபிதாஹனீப் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story