கம்பம்மெட்டு மலைச்சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு


கம்பம்மெட்டு மலைச்சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு
x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 8 Jun 2017 9:47 PM GMT)

கம்பம்மெட்டு மலைச்சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

கம்பம்,

கம்பத்தில் இருந்து காய்கறி, அரிசி மற்றும் இறைச்சி உள்ளிட்டவை கம்பம்மெட்டு மலைச்சாலை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சிலர் ரேஷன் அரிசி, மணல் போன்றவற்றை கேரளாவுக்கு கடத்திச்செல்லவும் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கேரள பகுதிகளில் இருந்து இறைச்சிக்கழிவு, மருத்துவக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை கம்பம்மெட்டு மலைச்சாலையில் தாழம்பூ கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு சிலர் கொண்டுவந்து கொட்டிச்செல்கின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியபடியே உள்ளது. மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து மருத்துவ கழிவுகளே அதிக அளவில் கம்பம்மெட்டு மலைச்சாலையில் கொட்டப்படுகின்றன. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், காலாவதியான மருந்துகள் மற்றும் ரத்தக்கறை படிந்த பஞ்சுகள் மலைச்சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களில் சிதறி கிடப்பதை காண முடியும்.

வனவிலங்குகளுக்கு ஆபத்து

இந்த கழிவுகளால் வனவிலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மலைச்சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மலைச்சாலை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியும் முறையாக மேற்கொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், கம்பம்மெட்டு மலைச்சாலையில் கேரள மாநிலத்தில் இருந்து குப்பைகள், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, வனத்துறையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று கூட தாழம்பூ கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள பள்ளத்தில் சாக்குப்பையை சிலர் வீசிச்சென்றனர்.

அதில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது என்று வனத்துறையினரிடம் தெரிவித்தோம். ஆனால் அதனை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் வனவிலங்குகள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என்றனர்.

Next Story