பரமத்தியில், குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பரமத்தியில், குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Jun 2017 3:41 AM IST (Updated: 9 Jun 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

பில்லூர் ஊராட்சி பகுதி மக்கள் குடிநீர் கேட்டு, பரமத்தியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பரமத்திவேலூர்,

பரமத்தி அருகே உள்ள பில்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்புப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவு குடிநீர் வசதி உள்ளது. இந்த நிலையில் பில்லூர் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தண்ணீர் திறந்து விடும் நபருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர் ஊராட்சி பகுதியில் தண்ணீர் திறந்துவிடாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக பலமுறை குடிநீர் திறந்துவிடக்கோரியும் அவர் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று பரமத்தியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் குடிநீர் கேட்டு அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சேகர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story