ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதில் கைது: கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதில் கைது: கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:45 AM IST (Updated: 9 Jun 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

பட்டா மாற்றம் செய்ய பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான 74-கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள காட்டுக்கொட்டை பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி சுமதி (வயது 35). இவர் அதே பகுதியில் வாங்கிய 2 வீட்டுமனைகளை கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றவும், உட்பிரிவு செய்து தரவும் 74-கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை (43) அணுகினார்.

அதற்கு அவர், உங்கள் நிலத்தை அளந்து பார்த்துதான் பட்டாவில் உட்பிரிவு செய்து தரமுடியும், அதனால் உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் தர விரும்பாத சுமதி இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி கடந்த 6-ந் தேதி சுமதி முருகேசனிடம் ரூ.25 ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

பணி இடைநீக்கம்

இதையடுத்து முருகேசனை போலீசார் சேலம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் லஞ்சம் பெற்று கைதான முருகேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் வருவாய்த்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதன்மீது ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன் உரிய விசாரணை நடத்தினார். இதையடுத்து சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் அறிவுரையின்பேரில், கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை உதவி கலெக்டர் செல்வன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story