பஸ்சில் சிறுமி கற்பழிப்பு: கண்டக்டர்-2 டிரைவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு


பஸ்சில் சிறுமி கற்பழிப்பு: கண்டக்டர்-2 டிரைவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு
x
தினத்தந்தி 8 Jun 2017 10:38 PM GMT (Updated: 2017-06-09T04:08:41+05:30)

பஸ்சில் வைத்து சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைதான கண்டக்டர், 2 டிரைவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு செய்த ஓமலூர் மகளிர் போலீசார், இது தொடர்பாக சேலம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

ஓமலூர்,

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையம் கிராமத்துக்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

 இந்த பஸ்சில் கண்டக்டராக வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 22), டிரைவராக சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (31), மாற்று டிரைவராக சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியை சேர்ந்த முருகன் (35) ஆகியோர் வேலை செய்தனர்.
கடந்த 5-ந் தேதி இரவு நாரணம்பாளையத்துக்கு வந்து நிறுத்தப்பட்ட இந்த பஸ்சில் வைத்து 15 வயது சிறுமியை பெருமாள் உள்பட 3 பேரும் கற்பழித்தனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்த சிறுமி கிராமமக்களிடம் விவரத்தை கூறினாள். உடனே, கிராமமக்கள் பஸ்சில் இருந்த 3 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

4 பேர் கைது

இதுபற்றி விசாரணை நடத்திய மகளிர் போலீசார், மைனர் பெண்ணை கடத்துதல், கூட்டாக கற்பழித்தல், தீண்டாமை வன்கொடுமை உள்பட 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து பெருமாள், மணிவண்ணன், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் இன்னொரு பஸ் கண்டக்டர் விஜய் (22) நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தனக்கு பழக்கமான அந்த சிறுமியை கண்டக்டர் பெருமாளுக்கு அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். எனவே, சிறுமி என்றுகூட பாராமல் அவரை கற்பழிப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்காக விஜயை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.

ஆண்மை பரிசோதனை

இந்த நிலையில் சிறுமியை கற்பழித்த பெருமாள், மணிவண்ணன், முருகன் ஆகியோருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார். கோர்ட்டு அனுமதி பெற்றவுடன் அவர்கள் 3 பேருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்தப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி, அவளது தாய், மாமா ஆகியோரிடம் கோர்ட்டு மூலமாக ரகசிய வாக்குமூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகவும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் போலீசாரால் சேகரிக்கப்பட்ட தடயங்களான பஸ்சின் இருக்கையில் வெட்டி எடுக்கப்பட்ட சில பகுதிகள், கைதான 3 பேரின் ஆடைகள், சிறுமியின் ஆடை ஆகியவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப அனுமதி கேட்டும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் மூலம் முதற்கட்டமாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் நிவாரண உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைதான கண்டக்டர்கள் பெருமாள், விஜய் ஆகியோரின் நடத்துனர் உரிமங்களும், டிரைவர்கள் மணிவண்ணன், முருகன் ஆகியோரின் ஓட்டுனர் உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பஸ்சின் ஆவணங்களை ஒப்படைக்குமாறு அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் கூறுகையில், “டி.ஐ.ஜி. நாகராஜன், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கு விசாரணையை முடித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்“ என்றார்.

Next Story