பணம் செலுத்தியும் நகை தர மறுப்பு: ஓமலூரில் வங்கி முன்பு விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


பணம் செலுத்தியும் நகை தர மறுப்பு: ஓமலூரில் வங்கி முன்பு விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 4:15 AM IST)
t-max-icont-min-icon

பணம் செலுத்தியும் நகையை தர மறுத்ததாக கூறி ஓமலூரில் வங்கி முன்பு விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த செம்மாண்டப்பட்டி ஊராட்சி பெரியபட்டி பகுதியை சேர்ந்தவர் காந்திமன்னன் (வயது 45), விவசாயி. இவர் கடந்த ஆண்டு விவசாய பணிக்காக தனது மனைவி மற்றும் குடும்பத்தினரின் நகைகளை ஓமலூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

ஆனால், கடும் வறட்சியால் பயிர்கள் காய்ந்ததால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை கட்ட முடியாமல் அவர் திணறி வந்தார். இந்த நிலையில் வங்கியில் இருந்து நகை ஏலத்துக்கான நோட்டீஸ் வந்ததாக தெரிகிறது. இதனால் நகை ஏலத்தில் போகாமல் இருக்க அக்கம்பக்கத்தினரிடம் அவர் கடன் வாங்கி ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் வங்கியில் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், நகையை கொடுக்காமல் வங்கியில் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சி

இதற்கிடையே, நகையை மீட்க கடன் கொடுத்தவர்கள் காந்திமன்னனிடம் பணம் கேட்டுள்ளனர். இதனால் நேற்று அவர், வங்கிக்கு சென்று மேலாளரிடம் நகையை கேட்டுள்ளார். அதற்கு அவர், உங்கள் நிலத்தின் மீது நீங்கள் வாங்கியுள்ள கடன் தவணையை கட்டினால்தான் நகையை கொடுக்க முடியும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் செய்வது அறியாமல் திகைத்த காந்திமன்னன், தற்கொலை செய்து கொள்வதற்காக தான் மறைத்து கொண்டு வந்திருந்த விஷ பாட்டிலை எடுத்து வங்கி முன்பு குடிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

உடனே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், காந்திமன்னனை பிடித்து அவர் கையில் இருந்த விஷபாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்கள்.

அங்கு அவரிடம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், நகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி காந்திமன்னனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story