11-ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் மராட்டிய அரசுக்கு விவசாயிகள் ‘கெடு’


11-ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் மராட்டிய அரசுக்கு விவசாயிகள் ‘கெடு’
x
தினத்தந்தி 9 Jun 2017 4:36 AM IST (Updated: 9 Jun 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 11-ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப் படும் என்று விவசாயிகள் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

நாசிக்,

மராட்டியத்தில் 11-ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப் படும் என்று விவசாயிகள் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

மராட்டியம் முழுவதும் விவசாயிகள் கடந்த 1-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பயிர்க்கடன்

பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயம், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாலையில் வீசியும், பாலை சாலையில் கொட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டத்தின் போது அகமத்நகர் மாவட்டம் புந்தாமா மற்றும் நாசிக் உள்ளிட்ட சில பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

அரசுக்கு நெருக்கடி

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும், சிவசேனா, சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால், அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில், பயிர்க்கடன் மீதான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 31-ந் தேதிக்குள் வெளியாகும் என்றும், மராட்டிய வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பயிர்க்கடன் தள்ளுபடி இருக்கும் என்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். அதேசமயம், 5 ஏக்கர் நிலத்துக்கும் குறைவான விவசாய நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பயிர்க்கடன் பெற தகுதியுடையவர்கள் என்று நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் அறிவித்தார்.

இதனால், அதிருப்தி அடைந்த விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இந்த போராட்டம் 2-வது வாரமாக தொடர்ந்து நீடிக்கிறது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கான வழிகாட்டுதல் குழுவின் முதலாவது ஆலோசனை கூட்டம் நேற்று நாசிக்கில் நடைபெற்றது. இதில், சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா தலைவர் ராஜூ ஷெட்டி எம்.பி., பச்சு கடூ எம்.எல்.ஏ., மராட்டிய கிஷான் சபா உறுப்பினர்கள் அஜித் நவாலே, ராஜூ தேசலே உள்பட பல்வேறு விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த ராஜூ ஷெட்டி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “சுவாமிநாதன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஆகையால், விவசாயிகளின் போராட்டத்தை தேசிய அளவில் எடுத்து செல்ல வேண்டும்” என்றார். மேலும், மாநில அரசின் துவரம் பருப்பு கொள்முதல் கொள்கையால் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் தான் லாபம் பெறுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

11-ந் தேதி வரை கெடு

மராட்டிய கிஷான் சபா உறுப்பினர் அஜித் நவாலே கூறும்போது, “வருகிற 11-ந் தேதிக்குள் (ஞாயிற்றுக் கிழமை) எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். அவ்வாறு ஏற்காவிட்டால், 12-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பும், தாலுகா அலுவலகம் முன்பும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். 13-ந் தேதி முதல் சாலை மறியல், ரெயில் மறியலிலும் விவசாயிகள் ஈடுபடுவர்” என்றார்.

சுயேச்சை எம்.எல்.ஏ. பச்சு கடூ கூறுகையில், “விவசாயிகளின் அடுத்தகட்ட போராட்டத்தின் போது, விவசாயிகள் மந்திரிகளை பொதுக்கூட்டங்களில் பேச விட மாட்டார்கள்” என்றார். 

Next Story