பவானிசாகரில் கண்டக்டர் மீது தாக்குதல்: நடுரோட்டில் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்
அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பவானிசாகரில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானிசாகர்,
பவானிசாகர் பஸ் நிலையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நேரக்காப்பாளர் அறை முன்பு நேற்று மாலை 5 மணி அளவில் சில மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது 5 பேர் குடிபோதையில் மாணவிகளை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அரசு பஸ் கண்டக்டர் திருலோகசந்தர் (வயது 24) என்பவர் இதை தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் சேர்ந்து கண்டக்டரை தாக்க முயன்று உள்ளனர். இதை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் தடுக்க வந்தனர். இதனால் அந்த 5 பேரும் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
பின்னர் சிறிது நேரத்தில் பவானிசாகரில் இருந்து திருலோகசந்தர் வந்த அரசு டவுன் பஸ் சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. பவானிசாகர் டவுன்சிப் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சை வழிமறித்த 5 பேரும், கண்டக்டர் திருலோகசந்தரின் சட்டையை பிடித்து கீழே இறக்கி அவரை தாக்கினர். இதை பஸ்சில் இருந்த பயணிகள் தடுத்ததால் அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து அரசு பஸ் கண்டக்டர் திருலோகசந்தரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக் டர்கள் பவானிசாகரில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் பவானிசாகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திருலோகசந்தரை தாக்கிய 5 பேரையும் உடனடியாக கைது செய்கிறோம் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து 7 மணி அளவில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதன்காரணமாக பவானிசாகரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story