சத்தியமூர்த்தி பவனில் பெண்கள் மோதிக்கொண்டது காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகல்ல குமரி அனந்தன் வேதனை
சத்தியமூர்த்தி பவனில் பெண்கள் மோதிக்கொண்டது காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகல்ல என்று குமரி அனந்தன் வேதனை தெரிவித்தார்.
ஈரோடு,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்திய பேரவை தலைவருமான குமரிஅனந்தன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் கள்ளுக்கடை மறியலுக்கு ஏற்பாடு செய்ததால் தான் முன்னாள் முதல் -அமைச்சர் காமராஜரை வெள்ளையர்கள் கைது செய்ய முயன்றனர். சுதந்திரம் பெற்றபிறகு தமிழ்நாட்டில் மதுக்கடை திறந்தபோது அதை எதிர்த்து எங்களை போன்றவர்களை போராடச் சொன்னவர் காமராஜர். இந்த போராட்டத்தின்போது 56 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையெல்லாம் நினைவு படுத்தவே காமராஜர் பிறந்தநாளான வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்ட மக்களை ஒன்று திரட்டி கோவையில் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மது மாபெரும் தீது, அதற்காக நான் 14 முறை பாதயாத்திரை சென்றுள்ளேன். அந்த விழிப்புணர்ச்சிதான் இன்று பெண்களே மதுக்கடையை எதிர்க்க வைத்துள்ளது, எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கேட்டு கோவையில் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் மது வேண்டாம் என்று சொல்லும் அனைவரும் கட்சி பேதமின்றி கலந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகல்ல
ஒருவருடைய உணவு இதுதான் என்று முடிவு செய்கிற அதிகாரம் மத்திய மோடி அரசுக்கு இல்லை. எனவே இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இந்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழை உலகப்பொது மொழியாக அறிவிக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும். உலக குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய் மொழியையும், உலக பொது மொழியையும் கற்றால் உலக ஒற்றுமை ஏற்படும்.
நான் தனி கட்சி வைத்திருந்தபோது மகளிர் பிரிவின் சார்பில் வீடுதோறும் தோட்டம் என்ற திட்டத்தை பவானி கூடுதுறையில் தான் ஆரம்பித்தேன். மகளிர் அணியினரையும் இந்த திட்டத்தை நடத்துங்கள் என்று கூறி அவர்கள் நடத்திய மாநாட்டில் வேண்டுகோள் விடுத்து கீரை, வெண்டை, முருங்கை உள்பட 1,000 விதைகள் கொண்ட பொட்டலங்களை என் செலவிலேயே கொடுத்தேன்.
ஆனால் இன்றைக்கு சத்தியமூர்த்தி பவனில் பெண்களுக்குள்ளே மோதல் என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. நான் விதை கொடுக்கச்சொன்னால் அவர் கள் ஒருவருக்கொருவர் உதை கொடுக்கிறார்கள்.
இது காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகல்ல. பெண்கள் செய்த தியாகங்கள் அதிகம். அந்த வழியிலே நம் மகளிர் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.
Related Tags :
Next Story