நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2017 7:30 PM GMT (Updated: 9 Jun 2017 6:53 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் தொடங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் தொடங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி

நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ–மாணவிகளுக்கு என்று மொத்தம் 72 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பள்ளி மாணவர்களுக்கு 38 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு 26 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு 4 விடுதிகளும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஒரு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் 2017–2018–ம் ஆண்டில் புதிதாக மாணவ–மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். பள்ளிகளில் 4–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவ–மாணவிகளும், கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ–மாணவிகளும் சேர்க்கப்படுவர். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 85 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், இதர வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படுவர்.

இலவச சீருடைகள்

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். பிளஸ்–2 வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு வினா வங்கிகள் இலவசமாக வழங்கப்படும்.

இந்த விடுதிகளில் மாணவ–மாணவிகள் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். 5 கிலோ மீட்டர் தூர நிபந்தனை மாணவிகளுக்கு பொருந்தாது. ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் சேர்க்கப்படுவர்.

இந்த தகுதியுடைய மாணவ–மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்–காப்பாளினிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை வருகிற 12.7.2017–க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்த வரை 21.7.2017–க்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்–காப்பாளினிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story