அ.தி.மு.க. அரசின் உறுதித்தன்மை குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


அ.தி.மு.க. அரசின் உறுதித்தன்மை குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2017 4:45 AM IST (Updated: 10 Jun 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசின் உறுதித்தன்மை குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

ஜனாதிபதி தேர்தல்

கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
பதில்:- நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் இப்பொழுது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.
கேள்வி:- ஒரு அமைச்சர், பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சியில்லை, அதனால் ஆதரவு கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை

கேள்வி:- எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைவதாக ஒரு தகவல் வந்துள்ளது, அதற்கு நீங்கள் ஏதாவது பரிந்துரை செய்திருக்கிறீர்களா?

பதில்:- எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய வேண்டுமென்று ஏற்கனவே ஜெயலலிதா மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறார். அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு தமிழகத்தில் அமைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நீட் தேர்வு

கேள்வி:- குடிநீர் தட்டுப்பாடு, நீட்தேர்வு, மாட்டிறைச்சி என அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல்-அமைச்சர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனரே?

பதில்:- நீட்தேர்வு குறித்து எத்தனை முறை பேட்டி கொடுத்தேன் என்று அத்தனை பேருக்கும் தெரியும். பிரதமரை 3 முறை சந்தித்தபோது, நீட் தேர்வு குறித்து அவரிடத்திலே விவரமாக, விளக்கமாக, தமிழக மாணவர்கள், ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று பலமுறை கோரிக்கை வைத்திருக்கின்றேன், உங்களுக்கு தெரியும்.

மாட்டிறைச்சி

கேள்வி:- மாட்டிறைச்சி சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்:- இன்னும் மத்திய அரசினுடைய முழுமையான அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. அது கிடைத்தவுடன் எங்களுடைய நிலைப்பாட்டை கூறமுடியும். அதற்கிடையிலே மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி, எதிர்க்கட்சியினுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கிறார்.

கேள்வி:- தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டங்களில் அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:- மக்களுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்தினாலும், அதை ஜெயலலிதாவின் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

அரசு வலிமையாக உள்ளது

கேள்வி:- தமிழக அரசு ஸ்திரத்தன்மையற்ற அரசு என்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். இரண்டு அணிகளின் இணைப்பு சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள்?

பதில்:- தமிழக அரசு வலிமையாக இருக்கிறது. 123 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு, ஒரு வலிமையான கட்சியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஏற்கனவே, 100 நாள் திட்டத்தைப் பற்றி, தெளிவாக எல்லா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தி இருக்கிறோம்.
இதுவரை எந்த ஒரு அரசும் செய்யாத அளவிற்கு ஜெயலலிதா அரசு, ஜெயலலிதா வழியிலே நின்று சிறப்பான திட்டங்களை இன்றைக்கு நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறது. விவசாயிகளுக்கு ஏரி, குளம், அணைகளிலே வண்டல் மண் அள்ளுகிற திட்டத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது. மணல் விற்பனையை அரசே ஏற்று இன்றைக்கு நடத்திக்கொண்டிருக்கிறது.

அதோடு இன்றைக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி, ஏராளமான திட்டங்களை அரசு குறுகிய காலத்திலே விரைந்து செயல்பட்டு இன்றைக்கு மக்கள் மனதிலே இடம்பெற்றிருக்கிறது. பொறுக்க முடியாதவர்கள், வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

தி.மு.க.வுக்கு தகுதி இல்லை

கேள்வி:- மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:- மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற கேள்வி எழவில்லை. இருந்தாலும், காலியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு அரசு

பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எப்பொழுது பார்த்தாலும் இந்த அரசு பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவுடைய அரசைப் பொறுத்தவரை, இது நிலையான அரசு. மக்கள் என்ன எண்ணுகிறார்களோ, அதை நிறைவேற்றுகிற அரசாக இருந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி பத்திரிகைகளையும், ஊடகங்களையும் சந்தித்து பேசினால் தான் அந்த அரசு இருக்கிறதென்று நினைக்காதீர்கள்.

ஜெயலலிதாவுடைய நிலையான அரசு, உறுதியான அரசு, 123 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு. இவர்களுடைய ஆட்சிக்காலத்திலே மைனாரிட்டி அரசாக இருந்தது. எங்கள் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Next Story