மணலுக்கு சமச்சீரான விலையை நிர்ணயம் செய்யக் கோரி கர்நாடக மேல்–சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா


மணலுக்கு சமச்சீரான விலையை நிர்ணயம் செய்யக் கோரி கர்நாடக மேல்–சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா
x
தினத்தந்தி 9 Jun 2017 10:00 PM GMT (Updated: 9 Jun 2017 7:19 PM GMT)

மணலுக்கு மாநிலம் முழுவதும் சமச்சீரான விலையை நிர்ணயம் செய்யக் கோரி கர்நாடக மேல்–சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு,

மணலுக்கு மாநிலம் முழுவதும் சமச்சீரான விலையை நிர்ணயம் செய்யக் கோரி கர்நாடக மேல்–சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது மணல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மந்திரி உறுதி அளித்தார்.

நேர்மையான அதிகாரிகளுக்கு...

கர்நாடக மேல்–சபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் பானுபிரகாஷ் கேட்ட கேள்விக்கு கனிம சுரங்கம் மற்றும் நில அறிவியல் துறை மந்திரி வினய்குல்கர்னி பதிலளித்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஈசவரப்பா குறுக்கிட்டு, “கர்நாடகத்தில் மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளையடிப்பவர்கள் தங்களது பாக்கெட்டை நிரப்பிக் கொள்கிறார்கள். ஆனால் சாமானிய மக்களுக்கு மணல் கிடைக்கவில்லை. மணலுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான சமச்சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும்“ என்றார்.

கூச்சல்–குழப்பம் ஏற்பட்டது

இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல்–குழப்பம் ஏற்பட்டது. மணலுக்கு சமச்சீர் விலையை நிர்ணயம் செய்யக் கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் மேல்–சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய மந்திரி வினய்குல்கர்னி, “எதிர்க்கட்சி தலைவர்கள் கூறினால், மணல் பாக்ய திட்டத்தை அமல்படுத்தவும் அரசு தயாராக உள்ளது. அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்தவே தனியாக மணல் கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தகைய வசதி முன்பு இருக்கவில்லை“ என்றார். ஆயினும் பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணாவை வாபஸ் பெறவில்லை. மணலுக்கு சமச்சீர் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று ஈசுவரப்பா பிடிவாதமாக கூறினார்.

ரூ.532 கோடி வருவாய்

அப்போது மீண்டும் பேசிய வினய்குல்கர்னி, “கர்நாடகத்தில் மணல் தட்டுப்பாடு பிரச்சினை இருப்பது உண்மை தான். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விதிமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. இதனால் இந்த மணல் தட்டுப்பாடு பிரச்சினை விரைவில் தீரும். தாவணகெரேயில் லாரிகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஹாவேரி, கதக் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மணல் லாரிகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும். கடந்த 3 ஆண்டுகளில் மணல் குவாரி தொழில் மூலம் அரசுக்கு ரூ.532 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் அபராதம் மூலம் ரூ.35.61 கோடி ஆகும். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 7,861 வழக்குகள் போடப்பட்டுள்ளன“ என்றார்.

கர்நாடகத்தில் 322 மணல் கிடங்குகள் உள்ளன. இதில் 222 கிடங்குகளுக்கு டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. அவை இன்னும் 15 நாட்களில் செயல்பட தொடங்கும். இதனால் மணல் தட்டுப்பாடு பிரச்சினை தீரும்“ என்றார். மீண்டும் பேசிய ஈசுவரப்பா, “மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் உதவி செய்கிறார்கள். மணல் கொள்ளையர்கள் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இதை தடுக்க வேண்டும்“ என்றார்.

தர்ணா போராட்டம் வாபஸ்

அப்போது குறுக்கிட்டு பேசிய போலீஸ் மந்திரியும், அவை முன்னவருமான பரமேஸ்வர், “மணல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண விதிமுறைகள் எளிதாக்கப்படும். மணல் தாராளமாக கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதனால் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்று இருக்கைக்கு திரும்ப வேண்டும்“ என்றார்.

பரமேஸ்வரின் விடுத்த இந்த வேண்டுகோளை ஏற்று பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்று தங்களது இருக்கைக்கு திரும்பினர்.


Next Story