பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 3:45 AM IST (Updated: 10 Jun 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நட வடிக்கைகள் குறித்த மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு மற்றும் துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தென்மேற்கு பருவமழை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறியப்பட வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளான வாகன போக்குவரத்து, படகு போக்குவரத்து போன்றவை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கிட அரசு பொது கட்டிடங்கள் கழிவறை வசதியுடன் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தயார் நிலையில்...

தென்மேற்கு பருவமழை காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுத்திட போதிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இடர்பாடு காலங்களில் கருத்து வேறுபாடின்றி அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து துயர் துடைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதுடன் பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் பழனிசாமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

செயல்முறை விளக்கம்

இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறையின் சார்பில் மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள், விஷவாயு ஏற்படும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை மற்றும் செயல்முறை விளக்கத்தை தீயணைப்புத்துறை அலுவலர்கள் செய்து காட்டினர். இதனை கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Next Story