திருமாந்துறை டோல்கேட்டில் 5-வது நாளாக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்


திருமாந்துறை டோல்கேட்டில் 5-வது நாளாக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2017 10:00 PM GMT (Updated: 9 Jun 2017 7:26 PM GMT)

திருமாந்துறை டோல்கேட்டில் பணியை புறக்கணித்து 5-வது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவரி வசூல் சாவடி மையம் (டோல்கேட்) உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு சுங்கவரி வசூல் செய்யும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், காவலர்கள் என 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக பணிபுறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுவரை நிர்வாகம் தரப்பில் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காதது ஊழியர்களை மேலும் வருத்தமடைய செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று 5-வது நாளாக சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் இலவசமாக சென்றன. வாகனங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

அமைதியான முறையில்...

திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் டோல்கேட் ஊழியர்களிடம் அந்நிய நபர்கள் யாரும் இங்கு வரக் கூடாது. தொழிலாளர்கள் அனைவரும் சட்டம் ஒழுங்கை மதித்து அமைதியான முறையில் போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த போராட்டம் குறித்து டோல்கேட் நிர்வாகம் தரப்பில் கேட்ட போது எந்தவித பதிலும் தர மறுத்தனர்.

Next Story