மீஞ்சூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
மீஞ்சூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் மளிகை கடை உள்ளது. இந்த கடைகளில் ரேஷன்அரிசி மூட்டைகள், கியாஸ் சிலிண்டர்கள், ரேஷன் மண்எண்ணெய் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பொருள் வழங்குதுறை அதிகாரிகள் நடவடிக்கையின் பேரில் மாவட்ட உணவுபொருள் வழங்கு அலுவலர் சந்தியா, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் நந்தியம்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று ஹார்டுவேர்ஸ் மற்றும் மளிகை கடைகளில் சோதனை செய்தனர்.
2 பேர் கைது
அப்போது 2 கடைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி, 2 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் 20 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தபட்ட இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ரேஷன் அரிசி, கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கியது தொடர்பாக துரைராஜ் (வயது 45), வேல்பாண்டி (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திருவள்ளூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story