திருவள்ளூரில் குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது
திருவள்ளூரில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பிவிட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி உத்தரவின் பேரில், நேற்று திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜ், பாரதி, தலைமைக்காவலர் ரமேஷ் மற்றும் போலீசார் ஈக்காடு சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்தபோது, அதிலிருந்த 3 பேர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்ய சென்றனர்.
ரூ.5 லட்சம் குட்கா
அப்போது, காரில் இருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் காரை திறந்து சோதனை செய்தபோது அதில் 6 மூட்டைகள் இருந்தன.
அவற்றை பிரித்து பார்த்தபோது ஒவ்வொரு மூட்டையிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் 60 பெட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.
கார் பறிமுதல்
இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த காரை பறிமுதல் செய்தனர். கார் டிரைவரான திருவள்ளூரை அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 25), மற்றும் ராமஞ்சேரியை சேர்ந்த உதயகுமார் (31) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில், அந்த குட்கா பொருட்களை செங்குன்றத்தில் இருந்து கடத்தி வந்து திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்ய எடுத்து வந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story