திருவள்ளூரில் போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம்


திருவள்ளூரில் போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Jun 2017 3:45 AM IST (Updated: 10 Jun 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான ஆட்டோக்கள் திருவள்ளூர் தேரடி வரை இயக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ஆட்டோக்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருவள்ளூர் போலீசார், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆட்டோ டிரைவர்களிடம் ரூ.500, ரூ.1,000 வரை அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. 

நேற்றும் போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே வந்து ஆட்டோக்களை வழிமறித்து அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

திடீர் வேலை நிறுத்தம்

 இதனால் ஆத்திரம் அடைந்த 300–க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு போலீசாரை கண்டித்து திடீர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ டிரைவர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி வந்த ரெயில் பயணிகள் பஸ்கள் மூலம் தேரடிக்கு சென்றனர்.

 ஆட்டோ டிரைவர்களின் திடீர் வேலை நிறுத்தம் குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சுமார் 4 மணி நேரம் ஆட்டோக்கள் ஓடவில்லை. அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

Next Story