திருவாரூர் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா?


திருவாரூர் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா?
x
தினத்தந்தி 9 Jun 2017 10:15 PM GMT (Updated: 9 Jun 2017 9:13 PM GMT)

திருவாரூரில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் நகரில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செல்வராஜ் தலைமையில், அலுவலர்கள் பாலுச்சாமி, விஜய குமார், லோகநாதன் ஆகியோர் நகரில் உள்ள அரிசி கடைகளை ஆய்வு செய்தனர். பின்னர் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது,

திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனையை தடுத்திட உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அடிக்கடி ஆய்வு நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து திருவாரூர் நகரில் உள்ள அரிசி கடைகளில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் எழுந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story