மன்னார்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


மன்னார்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 10 Jun 2017 4:00 AM IST (Updated: 10 Jun 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமானுஜம் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் (வயது52). இவர் மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு அவருடைய வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன் பகுதியில் சத்தம் கேட்டது. இதையடுத்து சதாசிவம் மற்றும் குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்து எழுந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு தீ எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

தீப்பற்றி எரிந்த பகுதியில் பாட்டில்கள் உடைந்து சிதறி கிடந்தன. மேலும் அப்பகுதியில் பெட்ரோல் வாசனை வீசியது. மர்ம நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவாரூரில் இருந்து மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஸ்டெபி மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. சம்பவம் நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

விசாரணை

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்கவும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story